சீருடை அணிய மாட்டோம்... கதறும் டாஸ்மாக் ஊழியர்கள்! 

 

 

தமிழகத்தில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு அரசு அறிவித்துள்ள புதிய சீருடையை அணிய மறுத்து ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்குப் பின்னால் பாதுகாப்பு தொடர்பான அச்சம் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

தமிழகத்தில் மொத்தம் 4,048 டாஸ்மாக் கடைகளில் 22,877 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு புதிய சீருடை வழங்க அரசு அறிவித்துள்ளது. அதன்படி, மேற்பார்வையாளர்களுக்கு இளநீல நிறச் சட்டை, கடற்படை நீல நிற பேண்ட் வழங்கப்பட உள்ளது. விற்பனையாளர்களுக்கு இளம்பழுப்பு நிறச் சட்டை, கருஞ்சாம்பல் நிற பேண்ட் என நிறங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

மூன்று செட் சீருடைகளுக்காக ஒவ்வொரு ஊழியரின் வங்கிக் கணக்கிலும் தலா ரூ.6,000 வரவு வைக்கப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் துணி வாங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், சீருடை அணிவதால் சமூகத்தில் தங்களை மதுக்கடை ஊழியர்கள் என எளிதில் அடையாளம் காண முடியும் என்றும், கடை வசூல் பணத்தை வங்கியில் செலுத்தச் செல்லும்போது கொள்ளையர்கள் குறிவைக்க வாய்ப்புள்ளதாகவும் ஊழியர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். மேலும், இதுவரை சீருடைக்கான துணி கிடைக்கவில்லை என்றும் கூறுகின்றனர்.

நவம்பர் 15-ம் தேதி முதல் சீருடை கட்டாயம் என நிர்வாகம் அறிவித்துள்ளது. அணியத் தவறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், வழங்கிய தொகையும் திரும்பப் பெறப்படும் என எச்சரித்துள்ளது.