கூடுதல் விலைக்கு மது விற்றால் ரூ.10,000 அபராதம் - டாஸ்மாக் நிர்வாகம் சுற்றறிக்கை!
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை அதிகபட்ச சில்லரை விற்பனை விலையை விடக் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் அதிகபட்சமாக ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் அதிகாரப்பூர்வ சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
நுகர்வோர் புகார்கள் அல்லது அதிகாரிகளின் திடீர் ஆய்வின் போது கூடுதல் விலைக்கு மது விற்றது உறுதிசெய்யப்பட்டால், வசூலித்த தொகையின் அடிப்படையில் அபராதம் விதிக்கப்படும். கூடுதலாக வசூலிக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் தலா ரூ.1,000 வீதம் அதிகபட்சமாக ரூ.9,000 வரை அபராதம் விதிக்கப்படும். ரூ.10 மற்றும் அதற்கு மேல் கூடுதல் வசூல்: ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும்.
அபராதத் தொகையில் 60 சதவீதத்தை மது விற்பனை செய்த பணியாளரும், 40 சதவீதத்தை அன்றைய தினம் பணியில் இருந்த மேற்பார்வையாளரும் செலுத்த வேண்டும். மேற்பார்வையாளர் இல்லாத பட்சத்தில் முழுத் தொகையையும் விற்பனையாளரே செலுத்த வேண்டும். கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்யும் பணியாளர்கள் மீது மூன்று கட்டங்களாகக் கடுமையான நடவடிக்கைகள் பாயும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது:
முதல் முறை தவறு செய்தால் 1 மாத காலம் தற்காலிகப் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்). இந்த காலத்தில் தொகுப்பூதியம் வழங்கப்படாது. அபராதம் வசூலிக்கப்பட்டு, இனி தவறு செய்ய மாட்டேன் என்ற உறுதிமொழிப் பத்திரத்துடன் தலைமையக ஒப்புதலுக்குப் பிறகே மீண்டும் பணி வழங்கப் படும்.
இரண்டாவது முறை தவறு செய்யும் பட்சத்தில் 3 மாத காலம் தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்படுவர். அபராதம் வசூலிக்கப்பட்ட பின், அதே மாவட்டத்தில் உள்ள மதுபானக் கிடங்கிற்கு மாற்றப்பட்டுப் பணிபுரிய வைக்கப்படுவர்.
மூன்றாவது முறை தவறு செய்தால் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்விசாரணை நடத்தப்படும். விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் எவ்விதத் தாக்ஷண்யமும் இன்றி நிரந்தரப் பணி நீக்கம் செய்யப்படுவர்.