நாளை  முதல் டாஸ்மாக் மதுபாட்டில் விலை ரூ.10 உயர்வு! புதிய விலைப்பட்டியல் வெளியீடு

 

 

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபாட்டில்களின் புதிய விலைப்பட்டியலை அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி, வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் அனைத்து வகை மதுபாட்டில்களின் விலையும் ரூ.10 உயர்கிறது.

இதுவரை மதுபாட்டில்களுக்கு கூடுதலாக பாட்டில் கட்டணமாக ரூ.10 வசூலிக்கப்பட்டு வந்தது. இனி அந்தத் தொகை நேரடியாக மதுபாட்டில்களின் அதிகபட்ச சில்லறை விலையான (MRP) விலையிலேயே சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் கடைகளில் விற்பனை செய்யப்படும் பாட்டில்களின் விலை ரூ.10 அதிகரித்துள்ளது.

இந்த மாற்றம் சாதாரண, மீடியம் மற்றும் பிரீமியம் என அனைத்து ரக மதுபானங்களுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், காலியான மதுபாட்டில்களைத் திருப்பிக் கொடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு அதற்கான ரூ.10 தொகையைத் திரும்பப் பெறும் நடைமுறை தொடரும் என அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.

இதனால் நவம்பர் 1 முதல் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களின் விலைப்பட்டியலில் மாற்றம் அமலுக்கு வருகிறது. புதிய விலைக்கு ஏற்ப விற்பனை நடைபெற உள்ளதால், மதுபானம் வாங்கும் வாடிக்கையாளர்கள் விலை விவரங்களை கவனிக்க வேண்டியுள்ளது.