டாஸ்மாக் மதுபான விலை உயர்வு! அக்டோபர் முதல் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதல் கட்டணம்
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களின் விலை அக்டோபர் முதல் வாரத்தில் இருந்து உயர உள்ளது. பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தமிழகத்தில் சில்லரை விற்பனை மூலம் மதுபானங்களை விற்பனை செய்யும் பணியை டாஸ்மாக் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. காலி மதுபாட்டில்களை மறுசுழற்சி செய்வதில் ஏற்படும் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், மதுபான பாட்டில்களுக்கு சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலத்தீர்வை விதிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்காக மதிப்பு கூட்டு வரி சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்த மாதம் முதல் வாரத்தில் இருந்து மதுபான பாட்டிலின் விலை ரூ.10 உயர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறுகையில், தற்போது மதுபானம் வாங்கும்போது அதிகபட்ச சில்லரை விலையுடன் சேர்த்து ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. காலி பாட்டிலை திரும்ப ஒப்படைத்தால் அந்த ரூ.10 வாடிக்கையாளருக்கு திருப்பி வழங்கப்படுகிறது.
புதிய தீர்வையின் மூலம் பாட்டிலுக்கு அதிகபட்சமாக ரூ.20 வரை விலை உயர்த்துவதற்கான வாய்ப்பு இருந்தாலும், தற்போது ரூ.10 உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த விலை உயர்வு அமலுக்கு வந்த பிறகு, மதுபானத்தின் விலையுடன் கூடுதலாக பணம் வசூலிக்கும் நடைமுறை இருக்காது என்றும் கூறப்பட்டுள்ளது.
மதுராந்தகம் மற்றும் திருப்பூர் இடைத்தேர்தல்கள் முடிந்த பிறகு இந்த விலை உயர்வு நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அக்டோபர் முதல் வாரத்தில் டாஸ்மாக் மதுபானங்களின் விலையில் மாற்றம் ஏற்பட உள்ளது.