“ஊழலை ஒழித்ததால் டாஸ்மாக் வருமானம் அதிகரித்தது” - அமைச்சர் விக்னேஷ்!
சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்துப் பேசிய டாஸ்மாக் மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ், த.வெ.க. அரசு டாஸ்மாக் நிர்வாகத்தில் மேற்கொண்டு வரும் சீர்திருத்தங்கள் குறித்து விளக்கமளித்தார். டாஸ்மாக் நிர்வாகத்தில் இருந்த ஊழல்கள் முற்றிலுமாகக் ஒழிக்கப்பட்டதன் காரணமாகவே தற்போதைய வருமானம் அதிகரித்துள்ளது.
தவெக ஆட்சியில் இதுவரை மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகளின் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. "மதுபானங்கள் மூலம் வரும் வருமானத்தை உயர்த்துவோம் எனத் தவெக அரசு ஒருபோதும் கூறாது. மதுபானம் மக்களுக்கு எளிதாகக் கிடைக்கக் கூடாது என்பதில் எங்கள் அரசு உறுதியாக உள்ளது. த.வெ.க. அரசு எப்போதும் மதுக்கடைகளுக்கு எதிரான அரசு" என்று அமைச்சர் அழுத்தமாகக் குறிப்பிட்டார்.
2011-ஆம் ஆண்டில் இருந்தே டாஸ்மாக் கடைகளில் எம்.ஆர்.பி. விலையை விட கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்கப்படும் பிரச்சனை நிலவி வந்தது. இதனைத் தடுக்கும் பொருட்டு, முதலமைச்சர் விஜய் அவர்களின் வழிகாட்டுதலின்படி, அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் டிஜிட்டல் பரிவர்த்தனைக்காக ஆன்லைன் கட்டண முறை கொண்டு வரப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.