காலி மதுபாட்டிலை வாங்க மறுத்த டாஸ்மாக் ஊழியர் சஸ்பெண்ட்!

 

 

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில், சென்னையில் வாடிக்கையாளர் ஒருவரிடம் காலி மதுபாட்டிலை வாங்க மறுத்த விற்பனையாளர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 15.11.2026 அன்று சென்னையில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் வாடிக்கையாளர் ஒருவர் காலி மதுபாட்டிலைத் திரும்ப ஒப்படைக்க வந்துள்ளார். அப்போது, அந்தக் கடையில் பணியாற்றிய விற்பனையாளர் விக்டர், பாட்டிலை வாங்க மறுத்ததுடன், வாடிக்கையாளருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளார்.

காலி பாட்டில்களைத் திரும்பப் பெறுவது தொடர்பான விதிமுறைகளை மீறி விக்டர் செயல்பட்டது விசாரணையில் உறுதி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சென்னை (தெற்கு) மாவட்ட மேலாளர் ஜஸ்வந்த் கண்ணன், விக்டரை 16.11.2026 முதல் தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.மேலும், கடையின் மேற்பார்வையாளர் கேசவனுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை டாஸ்மாக் ஊழியர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.