பள்ளி அருகே மூடப்பட்ட டாஸ்மாக் கடை மீண்டும் திறப்பு... உரிமையாளர் தவெகவில் இணைந்ததால் காற்றில் பறந்த முதல்வர் உத்தரவு!
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் பள்ளி மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் மதுபானக் கடை, அதிகாரிகளால் மூடப்பட்ட சில நாட்களிலேயே தற்போது மீண்டும் அதிரடியாகத் திறக்கப்பட்டுள்ள சம்பவம் அந்தப் பகுதி பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பலத்த அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
திருப்பரங்குன்றம் பேருந்து நிலையப் பாலம் மற்றும் பள்ளி வளாகங்களுக்கு மிக அருகாமையில் விதிகளை மீறி 3 டாஸ்மாக் மதுபானக் கடைகள் நீண்ட நாட்களாகச் செயல்பட்டு வந்தன. இதற்கு எதிராகப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வந்தனர். பொதுமக்களின் தொடர் கோரிக்கைகளை அடுத்து, சட்ட விதிகளின்படி பள்ளி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகே இருந்த அந்த 3 டாஸ்மாக் கடைகளையும் உடனடியாக மூடுவதற்கு அரசு அதிகாரிகள் அண்மையில் அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தனர்.
இதன்படி கடைகள் மூடப்பட்டு மக்கள் நிம்மதியடைந்த நிலையில், தற்பொழுது யாரும் எதிர்பாராத விதமாக, மூடப்பட்ட 3 கடைகளில் ஒரு குறிப்பிட்ட கடை மட்டும் அனைத்து விதிகளையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டு மீண்டும் அதே இடத்தில் அவசர அவசரமாகத் திறக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளின் உத்தரவையும் மீறி, பள்ளி அருகே உள்ள இந்த டாஸ்மாக் கடை மீண்டும் திறக்கப்பட்டதற்குக் பின்னால் உள்ளூர் அரசியல் செல்வாக்கு இருப்பதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ள அந்தக் கடையை நடத்தி வந்தவர் உள்ளூரைச் சேர்ந்த பிரபல அதிமுக பிரமுகரான செல்வம் என்பவராவார். இவர், தமிழகத்தில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, அண்மையில் தங்களை ஆளும் கட்சியான தவெகவில் முறைப்படி இணைத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. கட்சியில் இணைந்த சில நாட்களிலேயே, தனது அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி மூடிய கடையை அவர் மீண்டும் திறந்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 87 பக்தர்கள் மயக்கமடைந்த சம்பவத்தால் அந்தப் பகுதியே பரபரப்பாகக் காணப்படும் வேளையில், பள்ளி அருகே மீண்டும் திறக்கப்பட்டுள்ள இந்த டாஸ்மாக் கடையை உடனடியாக நிரந்தரமாக மூட வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் தவெக அரசுக்கு எதிராகப் போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாகவும் அப்பகுதி மக்கள் எச்சரித்துள்ளனர்.