மது பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 'செஸ் வரி' விதிக்கப் பரிசீலனை - உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தகவல்!

 

தமிழகத்தில் வனப்பகுதிகள் மற்றும் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் காலி மதுப் பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தில் புதிய மாற்றங்களைக் கொண்டு வரத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி, மதுபானங்களின் அதிகபட்ச விற்பனை விலையுடன் கூடுதலாக ரூபாய் 10-ஐ 'செஸ் வரியாக' விதிக்க அரசு பரிசீலித்து வருவதாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்குகளைப் பாதுகாக்கும் நோக்கில், உயர் நீதிமன்ற உத்தரவின்படி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுப் பாட்டில்களுக்குக் கூடுதலாக ரூபாய் 10 வசூலிக்கப்பட்டு, காலி பாட்டில்களைத் திரும்ப ஒப்படைக்கும் போது அந்த ரூபாய் 10 மீண்டும் நுகர்வோரிடம் வழங்கப்படும் திட்டம் தற்பொழுது நடைமுறையில் உள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கின் தற்போதைய நிலை குறித்து நீதிபதிகள் என். சதீஷ்குமார் மற்றும் டி. பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் இந்தத் திட்டத்தை மாற்றியமைப்பது குறித்த முக்கிய அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

பாட்டில்களைத் திரும்பப் பெறும்போது ரூபாய் 10 வழங்கும் தற்போதைய நடைமுறைக்கு மாற்றாக, அந்தத் தொகையை மதுபான விற்பனை விலையுடனேயே சேர்த்து விற்க அரசு திட்டமிட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளில் இருந்து காலி மது பாட்டில்களைச் சேகரிப்பது, அவற்றை வாகனங்கள் மூலம் கொண்டு செல்வது மற்றும் மறுசுழற்சி செய்வது ஆகிய அனைத்துப் பொறுப்புகளையும் சம்பந்தப்பட்ட மதுபான உற்பத்தி நிறுவனங்களிடமே முழுமையாக ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள மதுவிலக்குத் துறை ஆணையருக்கு முறைப்படி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

மதுபானங்களின் அதிகபட்ச விற்பனை விலையுடன் கூடுதலாக ரூபாய் 10-ஐ செஸ் வரியாக விதிப்பது குறித்து வணிக வரித்துறை ஆணையர் அரசுக்குத் தகுந்த கருத்துருவை அனுப்பியுள்ளார். இந்த செஸ் வரியை அமல்படுத்துவதற்காக, மதிப்பு கூட்டு வரி சட்ட விதிகளில் தேவையான திருத்தங்களை மேற்கொள்வது குறித்துத் தமிழக அரசு தற்பொழுது தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.

டாஸ்மாக் நிர்வாகத்தின் இந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை 6 வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர். மேலும், இந்தச் சட்டத் திருத்தங்கள் மற்றும் செஸ் வரி விதிப்பு தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்யத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.