டாஸ்மாக்கில் வெளிநாட்டு மதுபானங்களை விற்க முடிவு!

 

 

தமிழக அரசின் வருவாயை அதிகரிக்கும் நோக்கிலும், நுகர்வோருக்குப் கூடுதல் தேர்வுகளை வழங்கும் வகையிலும் டாஸ்மாக் கடைகளில் வெளிநாட்டு மதுபானங்களின் விற்பனையை அதிகப்படுத்தத் தமிழக அரசு தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.

இத்திட்டத்தை அடுத்த ஆறு மாதங்களுக்குள் முழுமையாகச் செயல்படுத்தத் தேவையான ஆயத்தப் பணிகளை டாஸ்மாக் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

வெளிநாட்டு மதுபானங்களை முறையாகப் பராமரிக்கவும், வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த அனுபவத்தை வழங்கவும் தற்போதுள்ள 250 சதுர அடி கொண்ட சாதாரண டாஸ்மாக் கடைகளைப் படிப்படியாக 500 சதுர அடியாக விரிவாக்கம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், கடைகளுக்குப் புதிய வர்ணம் பூசுதல் போன்ற புதுப்பித்தல் பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.

அண்டை மாநிலங்களான கர்நாடகா (பெங்களூரு) மற்றும் புதுச்சேரிக்குச் சென்று மக்கள் பல்வேறு பிராண்டுகளை வாங்குவதால், தமிழக அரசுக்குக் கணிசமான வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க, அண்டை மாநிலங்களில் புகழ்பெற்ற விஸ்கி மற்றும் பீர் பிராண்டுகளைத் தமிழகத்தில் அறிமுகப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் உள்ளூர் பிராண்டுகளின் ஏகபோக ஆதிக்கம் கட்டுப்படுத்தப்படும்.

வெளிநாட்டு மதுபானங்களைச் சரியான வெப்பநிலையில் சேமித்து வைப்பதற்கான குளிர்சாதன வசதிகள் மற்றும் வாடிக்கையாளர் தளத்தின் அடிப்படையில், இந்த புதிய பிராண்டுகள் முதற்கட்டமாக எலைட் டாஸ்மாக் கடைகளில் அறிமுகப்படுத்தப்படும்.

தற்போது எலைட் கடைகளில் இலங்கை, ஜெர்மனி, பூட்டான் மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பீர் வகைகள் மட்டுமே அதிகளவில் கிடைக்கின்றன. விஸ்கி போன்ற வெளிநாட்டு மதுபானங்களில் குறைந்த அளவு மில்லி (180ml, 500ml) பாட்டில்கள் கிடைப்பதில்லை; 750ml மற்றும் 1 லிட்டர் பாட்டில்கள் மட்டுமே ரூ.3,000 முதல் ரூ.4,000 வரையிலான விலையில் கிடைக்கின்றன. இதனால், நகர்ப்புற நுகர்வோரின் தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்ய, அனைத்து அளவுகளிலும் வெளிநாட்டு மதுபானங்களை அறிமுகப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

அண்டை மாநிலங்களின் முன்னணி மதுபானத் தயாரிப்பு நிறுவனங்கள் ஏற்கனவே தமிழகச் சந்தையில் நுழைய விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், தமிழக அரசின் கலால் வரி விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்த வெளிநாட்டு மதுபானங்களின் இறுதி விலை நிர்ணயம் செய்யப்படும் என டாஸ்மாக் சில்லறை விற்பனைப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.