டாஸ்மாக் காலி பாட்டில் ...  இனி எங்கு வேண்டுமானாலும் கொடுத்து ரூ.10 வாங்கலாம்!

 

தமிழ்நாட்டில் காலி மதுபான பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தில், குடிமகன்களுக்குச் சாதகமான ஒரு முக்கிய மாற்றத்தைச் செய்ய டாஸ்மாக் நிர்வாகம் அதிரடியாகப் பரிசீலித்து வருகிறது. தற்போது நடைமுறையில் உள்ள திட்டத்தின்படி, QR கோடுடன் கூடிய ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட மதுபாட்டில்களை எந்தக் கடையில் வாங்கினோமோ, அதே கடையில் ஒப்படைத்தால் மட்டுமே 10 ரூபாய் திரும்ப வழங்கப்பட்டு வருகிறது. இந்த நடைமுறையில் உள்ள சிக்கல்களைக் களைந்து, திட்டத்தை மேலும் எளிமைப்படுத்த டாஸ்மாக் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

அதன்படி, இனி மதுபாட்டில்களை வாங்கிய கடையிலேயே கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இருக்காது; தமிழ்நாட்டில் உள்ள எந்த டாஸ்மாக் கடையிலும் காலி பாட்டில்களைக் கொடுத்துவிட்டு 10 ரூபாயைப் பெற்றுக் கொள்ளும் வகையில் புதிய வசதி வரவுள்ளது. இதற்காக அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் பாட்டில்களை ஸ்கேன் செய்யும் வசதி மற்றும் கணினி மயமாக்கப்பட்ட நடைமுறைகளை மேம்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தின் மூலம் காலி பாட்டில்கள் பொது இடங்களில் வீசப்படுவது பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், காலி பாட்டில்களால் ஏற்படும் விபத்துகளைத் தவிர்க்கவும் கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது சில மாவட்டங்களில் மட்டும் சோதனை முயற்சியாகச் செயல்படுத்தப்பட்டு வரும் இந்த 'எந்தக் கடையிலும் பாட்டில் வழங்கும் வசதி', விரைவில் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளது. டாஸ்மாக் நிர்வாகத்தின் இந்த புதிய முடிவு மதுப்பிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.