மதுபானப்பிரியர்கள்  அதிர்ச்சி... மதுபானங்களின் விலை 50 ரூபாய் வரை உயர்வு? 

 

தமிழகத்தில்  4,048 டாஸ்மாக் சில்லறை மதுபானக் கடைகள் செயல்பட்டு வரும் நிலையில், இக்கடைகளின் மூலம் நாளொன்றுக்குச் சராசரியாக 150 கோடி ரூபாய் அளவிற்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இக்கடைகளில் விற்பனை செய்யப்படும் விஸ்கி, பிராந்தி, ரம் போன்ற இந்தியத் தயாரிப்பு வெளிநாட்டு மதுபானங்கள் மற்றும் பீர் உள்ளிட்ட அனைத்து மதுபானங்களின் விலையையும் அதிரடியாக உயர்த்த டாஸ்மாக் நிர்வாகம்  புதிய திட்டம் தீட்டியுள்ளது. அதன்படி சாதாரண மற்றும் நடுத்தர வகை மதுபானங்கள் மற்றும் பீர் உள்ளிட்டவற்றின் விலையை 10 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை உயர்த்த அண்மையில் நடைபெற்ற டாஸ்மாக் நிர்வாக வாரியக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றவுடன் இந்தியத் தயாரிப்பு வெளிநாட்டு மதுபானங்கள் மற்றும் பீர் தயாரிக்கும் ஆலைகளுக்கு, உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு பெட்டிக்கும் கூடுதலாகக் கட்டணம் நிர்ணயித்தது. இதனால் தங்களின் உற்பத்தி மற்றும் விநியோகச் செலவுகள் பெருமளவு அதிகரித்துள்ளதாகக் கூறி, மதுபான ஆலை உரிமையாளர்கள் சில்லறை விற்பனை விலையை உயர்த்துமாறு அரசிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இதன் காரணமாகவே  டாஸ்மாக் நிர்வாகக் கூட்டத்தில் விலை உயர்வு குறித்து ஆலோசிக்கப்பட்டு, இறுதி முடிவெடுக்கும் நிலைக்கு அரசு வந்துள்ளது.

இந்த விலை உயர்வு மற்றும் அதன் அளவு குறித்த இறுதிக்கட்ட உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் இன்று அல்லது நாளை மீண்டும் நடத்தப்பட்டு புதிய அறிவிப்பு வெளியிடப்பட வாய்ப்புள்ளது. இந்த வாரத்தில் ஆலோசனைகள் முழுமையாக நிறைவடைந்தால், அடுத்த வாரத்தின் தொடக்கத்திலேயே இந்த புதிய விலை உயர்வு மாநிலம் முழுவதும் அதிகாரப்பூர்வமாக அமல்படுத்தப்படலாம் என டாஸ்மாக் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கடைசியாகக் கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 ஆம் தேதி மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்ட நிலையில்,  மீண்டும் விலை உயரவுள்ளது மதுப்பிரியர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.