கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்தால்  டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.10,000 அபராதம் !  

 

தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச விற்பனை விலையை விடக் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதாகப் பல புகார்கள் தொடர்ந்து வந்தன. இதனைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் டாஸ்மாக் நிர்வாகம் விற்பனைக் கடை ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை விதிகளைக் கடுமையான முறையில் திருத்தியுள்ளது. புதிய விதிமுறைகளின்படி, நிர்ணயிக்கப்பட்ட விலையை விட ரூ.10 அல்லது அதற்கு மேல் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்றால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் எனக் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.1 முதல் ரூ.9 வரை கூடுதலாக வசூலித்தால், வசூலிக்கும் ஒவ்வொரு கூடுதல் ரூபாய்க்கும் ஆயிரம் ரூபாய் வீதம் அபராதம் வசூலிக்கப்படும் எனக் அறிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்யும் ஊழியர்கள் மீது 3 கட்டங்களாகக் கடுமையான நடவடிக்கைகள் பாயும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்முறை தவறு செய்தால் ஒரு மாதம் சம்பளமில்லா இடைநீக்கம், அபராதம் விதிக்கப்பட்டு, குறைந்த விற்பனை உள்ள வேறு கடைக்குத் தூரத்து மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்படுவர். இரண்டாவது முறை அதே தவறைச் செய்தால் 3 மாதங்கள் சம்பளமில்லா இடைநீக்கம் செய்யப்பட்டுச் சேமிப்புக் கிடங்கிற்கு மாற்றப்படுவார்கள். மூன்றாவது முறையும் தொடர்ந்து விதிமீறலில் ஈடுபட்டால், துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அபராதத் தொகையில் 60 சதவீதம் விற்பனை செய்த விற்பனையாளரிடம் இருந்தும், மீதி 40 சதவீதம் பணியில் இருந்த மேற்பார்வையாளரிடம் இருந்தும் வசூலிக்கப்படும். மேற்பார்வையாளர் கடையில் இல்லாத பட்சத்தில், முழு அபராதத் தொகையும் சம்பந்தப்பட்ட விற்பனையாளரிடமிருந்தே முழுமையாக வசூலிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட மேலாளர்களும் இந்த புதிய உத்தரவை ஊழியர்களுக்குத் தெரிவித்து ஒப்புதல் பெற வேண்டும் என டாஸ்மாக் தலைமை அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.