டாஸ்மாக் கடைகளில் 11 வகையான மதுபானங்களுக்குத் தடை!

 

 

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் பிரபல பதினொன்று மதுபான வகைகளை விற்பனை செய்வதற்குத் தமிழ்நாடு அரசு அதிரடியாகத் தடை விதித்துள்ளது. இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் நடத்திய சோதனைகளின் அடிப்படையில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மதுபானங்களில் செயற்கையான சுவையூட்டும் பொருட்கள் சேர்க்கப்பட்டிருப்பது உறுதியானதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட அந்த மதுபானத் தயாரிப்புகளை விற்பனை செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் நுகர்வோருக்கு அவற்றை வழங்கக் கூடாது என்றும் கண்டிப்பான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. மேலும் சம்பந்தப்பட்ட மதுபான வகைகளைத் கிடங்குகளில் இருந்து சில்லறை விற்பனைக் கடைகளுக்கு இடமாற்றம் செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்த குறிப்பிட்ட மதுபானங்கள் எங்குமே விற்பனை செய்யப்படக் கூடாது என்று தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அதிரடி உத்தரவைத் தொடர்ந்து மண்டலம் மற்றும் மாவட்ட வாரியாக உள்ள அனைத்துக் கடைகளிலும் உரிய சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. விதிகளை மீறி விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அரசு தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது. திடீரென பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த மதுபானத் தடை உத்தரவு தொடர்புடைய துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.