பேச்சுவார்த்தை தோல்வி... டாஸ்மாக் ஊழியர்கள் ஆக.28 முதல் வேலைநிறுத்தம்!
பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட பல்வேறு நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆகஸ்ட் 28-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தற்காலிக ஊழியர்களாகப் பணியாற்றி வரும் டாஸ்மாக் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், காலமுறை ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும், காலி பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தின் சுமையைக் குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு வருகின்றன.
சட்டமன்ற மானியக் கோரிக்கை முடியும் வரை போராட்டத்தைக் தள்ளிவைக்குமாறு அமைச்சர் தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையைத் தொழிற்சங்கங்கள் ஏற்க மறுத்தன. இதனால் நடத்தப்பட்ட முதற்கட்ட சமரசப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
பேச்சுவார்த்தை உடன்பாடாகாததால், முன்னதாக அறிவித்தபடி ஆகஸ்ட் 28-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் ஊழியர்கள் திட்டமிட்டபடி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் எனத் தொழிற்சங்கக் கூட்டமைப்பு உறுதிபடத் தெரிவித்துள்ளது.