மதுபோதை தகராறில் கொடூரம்... பச்சை குத்தும் கலைஞர் குத்திக் கொலை!
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட காமாட்சி அம்மன் கோயில் தெரு பகுதியில் வசித்து வருபவர் ஏழுமலை. 50 வயதான இவர் அந்தப் பகுதியில் பூ மற்றும் மாலை கட்டி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவருடைய மகன் இருபத்தியந்து வயதான ரூபேஷ் ஆவார். இவர் பச்சை குத்தும் கலைஞராகச் சென்னையில் தங்கிப் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு ரூபேஷ் மது அருந்திவிட்டுத் தனது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவருக்கும் அவரது தந்தை ஏழுமலைக்கும் இடையே திடீரென வீண் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்தத் தகராறு சிறிது நேரத்தில் இருவருக்கும் இடையே மிகக் கடுமையாக முற்றியது. இதில் ஆத்திரமடைந்த ஏழுமலை வீட்டில் இருந்த கத்தியை எடுத்துத் தனது மகன் ரூபேஷை சரமாரியாகக் குத்தியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்த ரூபேஷை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்துத் தகவல் அறிந்து வந்த சிவகாஞ்சி காவல்துறையினர் ரூபேஷின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மகனைக் கொலை செய்த தந்தை ஏழுமலையைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.