தவெக எம்.எல்.ஏ.வின் ஆபாச மெசேஜ் விவகாரம்... நீதிபதி விக்டோரியா கௌரி சரமாரி கேள்வி!

 

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாச தகவல் அனுப்பியதாகப் புகார் எழுந்துள்ள நிலையில், இது பணியிடத் துன்புறுத்தல் இல்லையா என்றும், புகார் அளித்தும் காவல்துறை ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி விக்டோரியா கௌரி கேள்வி எழுப்பியுள்ளார்.

உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்ற பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நீதிபதி விக்டோரியா கௌரி கலந்து கொண்டு பேசினார். அப்போது, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் ஆபாச தகவல் அனுப்பியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை அவர் நேரடியாகச் சுட்டிக்காட்டினார்.

ஒரு மாவட்ட ஆட்சியருக்கே இதுபோன்ற ஆபாசத் தகவல் அனுப்பப்பட்டால், அது பணியிடத்தில் நிகழும் துன்புறுத்தலாகாதா என நீதிபதி விக்டோரியா கௌரி வெளிப்படையாகக் கேள்வி எழுப்பினார். இது தொடர்பாகப் புகார் அளிக்கப்பட்ட பிறகும், காவல்துறை இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பவில்லை எனத் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் உள்ளிட்டோர் கூறி வந்தனர். அதே நேரத்தில், கூட்டணித் தலைவரான காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாகூர், அருள் விக்னேஷ் விவகாரத்தில் அனுதாபப்படும் வகையில் கருத்து தெரிவித்திருந்தார்.

அரசியல் வட்டாரங்களில் இந்த விவகாரம் குறித்துப் பல்வேறு கருத்துகள் நிலவி வந்தாலும், பெண் நீதிபதி ஒருவர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பணியிடப் பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தின் அடிப்படையில் கேள்வி எழுப்பியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அரசு உயர் அதிகாரிக்கு எதிராகக் கூறப்படும் ஆபாசத் தகவல் புகார் மற்றும் காவல்துறையின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்துச் சட்ட மற்றும் நிர்வாக வட்டாரங்களில் தீவிர விவாதம் நடைபெற்று வருகிறது. புகாரின் அடிப்படையில் காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.