தமிழகத்தில் மீண்டும் டீ, காபி விலை உயர்வு.. பொதுமக்கள் அதிர்ச்சி!

 

தமிழ்நாட்டில் சர்க்கரையின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் மற்றும் தேநீர் கடை உரிமையாளர்கள் பெரும் கவலையடைந்துள்ளனர்.

கடந்த வாரம் 50 கிலோ கொண்ட சர்க்கரை மூட்டை ரூ.2,150-க்கு விற்பனையான நிலையில், தற்போது அதன் விலை திடீரென அதிகரித்து ரூ.3,500 ஆக உயர்ந்துள்ளது. வெளிச்சந்தையில் சில்லறை விற்பனையில் ஒரு கிலோ சர்க்கரை விலை ரூ.67 முதல் ரூ.68 வரை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் பால் விலை உயர்வால் சமீபத்தில்தான் டீ, காபி விலைகள் உயர்த்தப்பட்டன. தற்போது சர்க்கரையின் விலை மூட்டைக்குக் கணிசமாக உயர்ந்துள்ளதால், நஷ்டத்தைத் தவிர்க்கும் பொருட்டுத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டீ மற்றும் காபி விலையை மீண்டும் உயர்த்த தேநீர் கடை உரிமையாளர்கள் பரிசீலித்து வருகின்றனர்.

மத்திய நுகர்வோர் நல அமைச்சகம் இது குறித்துத் தெரிவித்துள்ள விளக்கத்தில், கரும்பு உற்பத்தி குறைவு மற்றும் பண்டிகைக் காலத் தேவை அதிகரிப்பே இந்த விலை உயர்வுக்குக் காரணம் என்றும், பதுக்கலைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.