வகுப்பறையில் சிறுநீர் கழித்த 5 வயது சிறுவனுக்குக் கொடூரம் - பிறப்புறுப்பில் சூடு போட்ட ஆசிரியை கைது!

 

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில், வகுப்பறையில் சிறுநீர் கழித்த 5 வயது சிறுவனின் பிறப்புறுப்பில் ஆசிரியை கத்தியைச் சூடாக்கிச் சூடு வைத்த கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

வாரணாசி பாண்டேபூரில் உள்ள 'சரீன் சோனி' என்ற தனியார் ப்ளே ஸ்கூலில் நர்சரி வகுப்பு படித்து வரும் 5 வயது சிறுவன், வகுப்பறையில் இருந்தபோது கழிவறைக்குச் செல்ல அனுமதி கேட்டுள்ளான். ஆனால் அதற்கு ஆசிரியை அனுமதி மறுத்ததாகக் கூறப்படுகிறது. கழிவறைக்குச் செல்ல முடியாததால் சிறுவன் தன்னிச்சையாக ஆடையில் சிறுநீர் கழித்துள்ளான். இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியை பிரீத்தி குஷ்வாஹா, கேஸ் அடுப்பில் கத்தியைச் சூடாக்கி அச்சிறுவனின் பிறப்புறுப்பில் சூடு போட்டியிருக்கிறார். 

வீடு திரும்பிய சிறுவன் வலியால் கதறி அழுது நடந்ததைத் தனது பெற்றோரிடம் கூறியுள்ளான். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுவனின் தந்தை கேசரி ஜெய்ஸ்வால் உடனடியாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த வாரணாசி காவல்துறையினர், கொடூரச் செயலில் ஈடுபட்ட ஆசிரியை பிரீத்தி குஷ்வாஹா, பள்ளி முதல்வர் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.