அதிர்ச்சி... +2 மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்சோவில் கைது!

 

மதுரை அருகே பிளஸ்-2 மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த விடுதி வார்டன் உட்பட 4 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுரை மாவட்டத்தில் 2025–26 கல்வியாண்டில் பயின்ற பிளஸ்-2 மாணவிகள் சிலர், தங்களுக்குப் பள்ளி ஆசிரியர் ஒருவர் நேரிலும் தொலைபேசி வாயிலாகவும் பாலியல் ரீதியாகத் தொந்தரவு அளித்து வந்ததாக மதுரை மாவட்ட ஆட்சியர் நிசாந்த் கிருஷ்ணாவிடம் ரகசியப் புகார் மனு அளித்தனர். ஆட்சியரின் உத்தரவைத் தொடர்ந்து, குழந்தைகள் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் உடனடியாக விசாரணையில் இறங்கினர்.

போலீசாரின் விசாரணையின் போது, சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது மாணவிகள் ஏற்கனவே பள்ளி முதல்வரிடம் புகார் அளித்திருந்ததாகவும், அதனடிப்படையில் அந்த ஆசிரியர் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்ததாகவும் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஊமச்சிகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர், விடுதி வார்டன் உட்பட 4 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

வழக்கின் முக்கியக் குற்றவாளியான ஆசிரியரைக் காவல்துறையினர் கைது செய்தனர். விடுதி வார்டன் உள்ளிட்ட மற்ற மூன்று பேரின் பின்னணி மற்றும் குற்றப் பங்கு குறித்தும், ஆசிரியர் மற்றும் மாணவிகளுக்கிடையேயான தொலைபேசி உரையாடல்கள் குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.