இன்று தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதித் தேர்வு... முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் பணிபுரியும் மற்றும் பணிபுரிய விரும்பும் ஆசிரியர்களுக்கான 'தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு' இன்றும், நாளையும் நடைபெறவுள்ளது. இத்தேர்வை எழுத வரும் தேர்வர்கள் காலை 9.30 மணிக்குள் கண்டிப்பாகத் தேர்வு மையத்திற்குள் வந்துவிட வேண்டும் என்றும், அதற்குப் பிறகு ஒரு நிமிடம் தாமதமாக வந்தாலும் மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ அறிவிக்கை எண்: 6.01/2026 (நாள்: 13.02.2026)-இன்படி, இந்த ஆண்டிற்கான தகுதித் தேர்வுகள் பின்வருமாறு திட்டமிடப்பட்டுள்ளன.
இன்று ஜூலை 4, சனிக்கிழமை தாள்-I (Paper-I) தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 222 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது. நாளை ஜூலை 5, ஞாயிற்றுக்கிழமை தாள்-II (Paper-II) தமிழகம் முழுவதும் உள்ள 613 தேர்வு மையங்களில் விரிவாக நடைபெறவுள்ளது.
இந்த ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வை எழுத ஒட்டுமொத்தமாக 2.29 லட்சத்திற்கும் அதிகமான தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதன் விபரங்கள்:இயக்குநர்கள் தலைமையில் ஐஏஎஸ் பாணியில் மாவட்டக் கண்காணிப்பு. தேர்வுகளில் எவ்வித முறைகேடுகளும் தடிவிடக் கூடாது என்பதற்காகப் பள்ளிக் கல்வித்துறை வரலாற்றிலேயே மிக உயரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தத் தேர்வுகளை நேரடியாகக் கண்காணிப்பதற்காகத் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த இயக்குநர், இணை இயக்குநர் மற்றும் துணை இயக்குநர் அந்தஸ்தில் உள்ள உயர்மட்ட அதிகாரிகள் 'மாவட்டக் கண்காணிப்பு அலுவலர்களாக' பிரத்யேகமாக நியமிக்கப்பட்டு அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தேர்வர்கள் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. தேர்வு எழுத வரும் ஆசிரியர்கள் மற்றும் தேர்வர்கள் அனைவரும் காலை 8.30 மணி முதல் 9.30 மணிக்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்திற்குள் நுழைந்துவிட வேண்டும்.
காலை 9.30 மணி என்பது இறுதி நேரமாகும். 9.30 மணிக்கு மேல் தேர்வு மையத்தின் பிரதான வாயில்கள் முழுமையாகப் பூட்டப்படும். அதன் பின்னர் வரும் தேர்வர்களுக்கு எக்காரணம் கொண்டும் தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட மாட்டாது. அனைத்துத் தேர்வு மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பும், தடையற்ற மின்சார வசதியும், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வசதிகளும் மாவட்ட நிர்வாகங்கள் மூலம் செய்யப்பட்டுள்ளன.