திருமணத்திற்கு வற்புறுத்தியதால் ஆசிரியை படுகொலை... காரின் டிக்கியில் சடலத்தை வைத்து ஊர் சுற்றிய பள்ளி மேலாளர்!
உத்தரப் பிரதேச மாநிலத்தில், தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்திய 27 வயது ஆசிரியை ஒருவரைக் கொடூரமாகக் கொலை செய்து, உடலைக் காரின் டிக்கியில் மறைத்து வைத்துச் சுற்றிய பள்ளி மேலாளரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டம் ஜங்கா பகுதியைச் சேர்ந்தவர் ராணி விஸ்வகர்மா (27). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று, தனக்கு சேர வேண்டிய நிலுவைச் சம்பளத்தைப் பெற்று வருவதாகக் குடும்பத்தினரிடம் கூறி விட்டுச் சென்ற ராணி விஸ்வகர்மா, நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
அன்றைய தினம் பிற்பகலில், கோரக்பூரிலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ள தியோரியா மாவட்டத்தின் ருத்ராபூர் பகுதியில், சாலையோரப் புதருக்குள் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்து வந்த தியோரியா காவல்துறையினர் சடலத்தைக் கைப்பற்றி முதற்கட்ட விசாரணையைத் தொடங்கினர். சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் அடையாளம் உடனடியாகத் தெரியாததால், அவரது புகைப்படத்தைச் சமூக ஊடகங்களில் போலீசார் பகிர்ந்தனர். இதன் மூலம், மாயமான ஆசிரியை ராணி விஸ்வகர்மா தான் அவர் என்பதை அவரது குடும்பத்தினர் அடையாளம் காட்டினர்.
இக்கொலை வழக்கு தொடர்பாக சந்தேகத்தின் பேரில் பள்ளி மேலாளர் விஜய் நிஷாத் என்பவரைப் பிடித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அளித்த அதிர்ச்சி வாக்குமூலத்தின்படி, ஏற்கனவே திருமணமான பள்ளி மேலாளர் விஜய் நிஷாந்திற்கும் ஆசிரியை ராணிக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாகக் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது.
சம்பவத்தன்று பள்ளிக்கு வந்த ஆசிரியை ராணி, தன்னை முறைப்படி திருமணம் செய்து கொள்ளுமாறு விஜய் நிஷாந்தை வற்புறுத்தியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த விஜய் நிஷாத், ஆசிரியையின் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். பின்னர், யாருக்கும் சந்தேகம் வராதவாறு ஆசிரியையின் சடலத்தை தனது காரின் பின்புற டிக்கியில் தூக்கிப் போட்டு மறைத்துள்ளார். பகல் முழுவதும் சடலத்துடன் காரிலேயே ஊர் சுற்றிய அவர், இரவு நேரம் வந்ததும் ருத்ராபூர் பகுதியில் உள்ள புதருக்குள் உடலை வீசிவிட்டுத் தப்பியோடியுள்ளார்.
இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பள்ளி மேலாளர் விஜய் நிஷாந்தைக் கைது செய்த காவல்துறையினர், அவரைக் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.