நடப்பாண்டு அரசுப் பள்ளிப் பாடப் புத்தகங்களை எடைக்குப் போட்ட ஆசிரியர்; கைகலப்பில் ஈடுபட்ட பொதுமக்கள்!
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில், நடப்பு கல்வி ஆண்டிற்காக மாணவர்களுக்கு வழங்க வேண்டிய புதிய பாடப் புத்தகங்கள் மற்றும் நோட்டுகளை அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் பழைய பேப்பர் கடைக்கு எடைக்கு விற்ற விபரீதச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருத்துறைப்பூண்டி அடுத்த ஆலத்தம்பாடி பகுதியில் 'ஜானகி அண்ணி அரசினர் மேல்நிலைப்பள்ளி' இயங்கி வருகிறது. இப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்குத் தமிழக அரசால் விலையில்லாமல் வழங்கப்படும் நடப்பு கல்வி ஆண்டிற்கான புதிய பாடப் புத்தகங்கள் மற்றும் நோட்டுகள் அண்மையில் வரவழைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், இப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர், மாணவர்களுக்கு விநியோகிக்க வேண்டிய புதிய நோட்டுப் புத்தகங்களை யாருக்கும் தெரியாமல் பழைய பொருட்கள் வாங்கும் நபரிடம் எடைக்கு விற்றுள்ளார். அரசுப் பள்ளிப் புத்தகங்களை மூட்டை கட்டிக்கொண்டு பழைய பொருட்கள் வாங்குபவர் வெளியில் சென்ற போது, அவரது வாகனத்தை அப்பகுதி மக்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் சந்தேகத்தின் பேரில் சூழ்ந்து தடுத்து நிறுத்தினர்.
அந்த மூட்டைகளைப் பிரித்துப் பார்த்த போது, அதில் நடப்பாண்டிற்குரிய புதிய அரசுப் பள்ளிப் பாடப் புத்தகங்களும் நோட்டுகளும் இருப்பதைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து, பள்ளி நிர்வாகத்துடனும், சம்பந்தப்பட்ட ஆசிரியரிடமும் பொதுமக்கள் திரண்டு சென்று கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பள்ளி வளாகத்தில் சில மணி நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
ஏழை எளிய வீட்டுப் பிள்ளைகள் படிப்பதற்காக அரசு இலவசமாக வழங்கும் புதிய பாடப் புத்தகங்களை, பொறுப்பான பதவியில் இருக்கும் ஆசிரியரே சுய லாபத்திற்காகப் பழைய பேப்பர் கடைக்கு எடைக்கு விற்ற செயல் பெற்றோர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் உள்ளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏழை மாணவர்களின் கல்வியோடு விளையாடிய மற்றும் அரசின் திட்டத்தைச் சீர்குலைத்த அந்த ஆசிரியர் மீது உடனடியாகப் துறை ரீதியான கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனப் பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் ஒருமித்துக் கோரிக்கை விடுத்துள்ளனர்.