காலை உணவுத் திட்டக் கண்காணிப்பு - ஆசிரியர்கள் காலை 7 மணிக்கே பள்ளிக்கு வர உத்தரவுக்குத் தீவிர எதிர்ப்பு!
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், இத்திட்டத்தைக் கண்காணிக்க ஆசிரியர்கள் காலை 7 மணிக்கே பள்ளிக்கு வருகை தர வேண்டும் என வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புக்கு ஆசிரியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
மாணவர்களின் ஏழ்மை நிலையைக் கருத்தில் கொண்டு முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை தொடங்கப்பட்ட காலை உணவுத் திட்டம், தற்போது 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை நீட்டிக்கப்பட்டு கடந்த செப்டம்பர் 22-ம் தேதியன்று முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்நிலையில், காலை உணவுத் திட்டத்தை நாள்தோறும் கண்காணிக்கப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் காலையில் 7 மணிக்கே பள்ளிக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது ஆசிரியர்கள் மத்தியில் மிகுந்த வருத்தத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
பல ஆசிரியர்கள் 30 முதல் 40 கிலோமீட்டர் தொலைவில் இருந்து பணிக்கு வந்து கொண்டிருக்கும் நிலையில், காலை 7 மணிக்கே பள்ளிக்கு வருவது என்பது மிகவும் சிரமமான செயல் என்று அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பைத் தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நலக் கூட்டமைப்பின் தலைவர் சா. அருணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் வலியுறுத்தியுள்ளார்.