ஊரே திரண்டு கண்ணீர்... இன்று சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் பாரதிராஜாவுக்கு இறுதிசடங்குகள்!

 

ஊரே திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கிறது. இன்று தேனியில் பாரதிராஜாவின் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படுகிறது. தமிழ் சினிமாவின் கிராமத்து மண்வாசனையைத் தன் திரைப்படங்கள் மூலமாக உலக அரங்கிற்கு கொண்டு சென்ற புகழ்பெற்ற இயக்குநர் பாரதிராஜா சென்னையில் காலமானார். வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாகத் தனது வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த அவர், 84-வது வயதில் உயிரிழந்தார். அவருடைய இந்த திடீர் மறைவு தமிழ் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் ஈடு செய்ய முடியாத பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய விருதுகள், மாநில அரசு விருதுகள் மற்றும் பத்மஸ்ரீ விருது எனப் பல்வேறு உயரிய விருதுகளைப் பெற்றுள்ள பாரதிராஜாவின் மறைவுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்களும் திரைத்துறையினரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவருடைய உடலுக்குத் தமிழ்நாடு அரசு சார்பில் முழு அரசு மரியாதை செலுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் விஜய் அறிவித்திருந்தார். அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்று ஒரு நாள் மட்டும் அனைத்துத் தமிழ்ப் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படுவதாகத் தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மறைந்த பாரதிராஜாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காகச் சென்னையில் உள்ள அவருடைய இல்லத்தில் வைக்கப்பட்ட நிலையில், இன்று சொந்த ஊரில் இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன. அதன் பின்னர் உறவினர்கள் மற்றும் திரையுலகினரின் அஞ்சலியுடன் அவருடைய உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.