undefined

தொழில்நுட்பக் கோளாறு... FACEBOOK பக்கம் முடக்கம்: உலகம் முழுவதும் பயனர்கள் தவிப்பு!

 

மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான முகநூல் தளம் திடீரென உலகம் முழுவதும் பல பகுதிகளில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முடங்கியுள்ளது. இதனால் லட்சக்கணக்கான பயனர்கள் தங்கள் கணக்குகளை அணுக முடியாமல் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். 

பல பயனர்கள் தங்கள் கணக்குகளில் இருந்து தானாகவே 'லாக்-அவுட்' செய்யப்படுவதாகவும், மீண்டும் லாக்-இன் செய்ய முயலும்போது "பக்கம் கிடைக்கவில்லை" என்ற செய்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர். சிலருக்குச் செல்போன் செயலிகளில் முகநூல் இயங்கினாலும், கணினி (Desktop) வழியாக அணுகும்போது தளம் வேலை செய்யவில்லை என்று ஸ்கிரீன்ஷாட்டுகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசிய நாடுகள் மட்டுமின்றி, ஐரோப்பா மற்றும் அமெரிக்கப் பகுதிகளிலும் இந்தப் பாதிப்பு இருப்பதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. மெட்டா நிறுவனத்தின் முக்கியச் சேவைகளான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் (Instagram) ஆகியவற்றின் சர்வர்களில் (Server) ஏற்படும் திடீர் தொழில்நுட்பக் கோளாறே இதற்குக் காரணம் எனக் கருதப்படுகிறது.

சில பயனர்கள் இது ஏதேனும் சைபர் தாக்குதலா எனச் சந்தேகம் எழுப்பியுள்ளனர். இருப்பினும், மெட்டா தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக "தொழில்நுட்பப் பராமரிப்பு அல்லது சர்வர் பிழை" குறித்த விளக்கம் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை.

இணையதள முடக்கங்களைக் கண்காணிக்கும் தளமான டவுன்டிடெக்டரில், ஆயிரக்கணக்கான புகார்கள் குறுகிய காலத்தில் பதிவாகியுள்ளன. உங்கள் முகநூல் பக்கம் இன்னும் வேலை செய்யவில்லை என்றால், பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்: ப்ளே ஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோர் சென்று முகநூல் செயலியைப் புதுப்பித்துப் பார்க்கவும். உலாவியில் (Browser) உள்ள 'Cache' மற்றும் 'Cookies' ஆகியவற்றை அழித்துவிட்டு மீண்டும் முயற்சிக்கலாம். இது பொதுவான தொழில்நுட்பக் கோளாறு என்பதால், அவசரப்பட்டு உங்கள் கடவுச்சொல்லை மாற்ற வேண்டாம்.

இன்று மாலைக்குள் இந்தப் பிரச்சனை முழுமையாகச் சரிசெய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் தற்போது பலருக்குச் சேவை மெதுவாகக் கிடைப்பதாகத் தகவல்கள் வருகின்றன.