தொழில்நுட்பக் கோளாறு.. சென்னையில் மெட்ரோ ரயில் சேவை திடீர் நிறுத்தம் !

 

சென்னை மெட்ரோ ரயில் பயனாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நாள் ஒன்று 2 லட்சம் பயணிகள் மெட்ரோவில் பயணம் செய்து வருகின்றனர். இதனால் சென்னையில் போக்குவரத்து சேவையில் மெட்ரோ ரயில் முக்கிய பங்குபெற்று வருகிறது. 

அதோடு, சென்னை முழுவதும் பல்வேறு நகரங்களில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சென்னை சென்ட்ரல் முதல் விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 

எனவே விமான நிலையம் செல்லக்கூடிய பயணிகள் ஆலந்தூரில் இறங்கி மாற்று வழித்தடத்தில் இயங்கக்கூடிய மெட்ரோ ரயிலில் பயணம் செய்யுமாறு மெட்ரோ நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. அதேபோல் அரசினர் தோட்டம் வழியாக ஆலந்தூர் செல்லும் நீல வழித்தடத்திலும் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டதால் மெட்ரோ பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தொழில்நுட்பக் கோளாறை சரி செய்யும் பணிகளில் தொழில்நுட்பப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தொழில்நுட்பக் கோளாறை சரிசெய்யும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும், விரைவாக முழுமையான அளவில் சேவை வழங்கப்படும் எனவும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.