திருமணப் பொருட்கள் வாங்கச் சென்ற இளம்பெண் அரசுப் பேருந்து மோதி பலி!
திருவேற்காடு அருகே திருமணத்திற்கான பொருட்கள் வாங்கச் சென்ற சகோதரிகளில் ஒருவர், அரசுப் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது.
திருவேற்காடு அடுத்த புளியம்பேடு பகுதியைச் சேர்ந்த குமார் என்பவரின் மகள்கள் கீர்த்திகா (26) மற்றும் சர்மிளா (23). கல்லூரி படிப்பை முடித்துள்ள கீர்த்திகாவுக்குத் திருமண நிச்சயதார்த்தம் முடிந்து, வரும் அக்டோபர் மாதம் திருமணம் நடைபெற இருந்தது. திருமணத்திற்காகப் பொருட்கள் வாங்க சகோதரிகள் இருவரும் போரூரில் உள்ள கடைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அய்யப்பன்தாங்கல் அருகே சென்றபோது, பின்னால் வந்த அரசுப் பேருந்து அவர்கள் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
பேருந்து மோதியதில் நிலைதடுமாறிச் சாலையில் விழுந்த சர்மிளா (23), அதே அரசுப் பேருந்தின் பின்புறச் சக்கரத்தில் சிக்கிச் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கீர்த்திகா லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இச்ஸ்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த ஆவடி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவுப் போலீசார், அரசுப் பேருந்து ஓட்டுநர் அய்யப்பன் (50) என்பவரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணக் கோலாகலத்திற்குத் தயாராகி வந்த குடும்பத்தில், தங்கையைப் பறிகொடுத்துப் சோகத்தில் மூழ்கியிருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.