லாட்ஜ் அறையில் இளம்பெண் மர்ம மரணம் - போலீசார் விசாரணை!
கர்நாடக மாநிலம் பெங்களூரில் லாட்ஜ் அறை ஒன்றில் 23 வயது இளம்பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வித்யாவுடன் தங்கியிருந்த அவரது கணவர் தப்பியோடிய நிலையில், போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
பெங்களூருவிலுள்ள ஒரு தனியார் லாட்ஜில் வித்யா (23) என்ற இளம்பெண் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். இவருக்கும் ஆனந்த் என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடந்துள்ள நிலையில், இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்.
சம்பவத்தன்று இந்தத் தம்பதி இருவரும் ஒன்றாக அந்த லாட்ஜில் வந்து தங்கியுள்ளனர். இந்நிலையில், அங்கு இளம்பெண் இறந்து கிடப்பதாகக் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
தகவலறிந்து உடனடியாக நிகழ்விடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், உயிரிழந்த பெண்ணின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இச்சம்பவத்திற்குப் பிறகு தலைமறைவாகியுள்ள கணவர் ஆனந்தைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே இளம்பெண்ணின் மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.