வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் கழுத்தறுக்கப்பட்டு சடலமாக மீட்பு - போலீசார் தீவிர விசாரணை!

 

விருதுநகர் மாவட்டத்தில் வீட்டின் உள்ளே இளம் பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் கீழஅழகியநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மயில் (31). இவருக்குப் பள்ளி செல்லும் வயதில் மகன் ஒருவன் உள்ளார். வழக்கம்போல் பள்ளி முடிந்து மாலை நேரத்தில் வீட்டிற்குத் திரும்பிய அந்தச் சிறுவன், கதவைத் திறந்து உள்ளே சென்றுள்ளான். அப்போது அங்கே தாய் மயில், கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து கூச்சலிட்டுள்ளான். சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அண்டை வீட்டார், உடனடியாக உள்ளூர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மயிலின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அங்கிருந்த தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

மயிலின் மரணம் குறித்துப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, இது திட்டமிட்ட கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் நிகழ்ந்த தற்கொலையா? என்ற இருவேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மர்மமான முறையில் பெண் இறந்து கிடந்த இச்சம்பவம் கீழஅழகியநல்லூர் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.