இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை... தவெக நிர்வாகிகள் 2 பேர் கைது!
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே, வேலை வாங்கித் தருவதாகக் கூறி பெண்ணுக்குக் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்துக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் கீழ் தமிழக வெற்றிக் கழகத்தைச் (தவெக) சேர்ந்த இரு முக்கிய நிர்வாகிகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் வேலை தேடி வந்த சூழலில், அவருக்கு நல்ல வேலை வாங்கித் தருவதாகக் கூறி தவெக நிர்வாகிகள் இருவர் அவரை காரில் அழைத்துச் சென்றுள்ளனர். பயணத்தின் போது, அப்பெண்ணுக்குக் கொடுக்கப்பட்ட குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, அவர் மயங்கிய நிலையைப் பயன்படுத்தி இருவரும் கூட்டுப் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
பாதிக்கப்பட்ட பெண் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதன் அடிப்படையில் இக்கொடுஞ்செயலில் ஈடுபட்டதாக பாலமுருகன் (தூத்துக்குடி மேற்கு மாவட்ட தவெக இளைஞரணி அமைப்பாளர்), ஜெயபால் (ராமநாதபுரம் மாவட்ட தவெக நிர்வாகி) ஆகிய இருவரையும் மகளிர் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பாலமுருகன் மற்றும் ஜெயபால் ஆகிய இருவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதியின் உத்தரவின் பேரில், குற்றஞ்சாட்டப்பட்ட இரு நிர்வாகிகளும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
அரசியல் கட்சி நிர்வாகிகள் இருவர் இத்தகைய அநாகரிகச் செயலில் ஈடுபட்டுப் போக்சோ மற்றும் பாலியல் வன்கொடுமை சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.