காதலைத் துண்டித்த இளம்பெண் வீடு புகுந்து வெட்டிக்கொலை; காதலன் வெறிச்செயல்!
ஆந்திர மாநிலத்தில் திருமணமான விபரத்தை மறைத்துக் காதலித்து வந்த ஆட்டோ ஓட்டுநர், தனது ஏமாற்று வேலை தெரிந்ததும் காதலைத் துண்டித்த பெண் சாப்ட்வேர் என்ஜினீயரை நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து கத்தியால் சரமாரியாகக் குத்திக் கொலை செய்த கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள தாடேரு கிராமத்தைச் சேர்ந்தவர் அனந்தவாணி (32). இவர் ஒரு முன்னணி நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராகப் பணியாற்றி வந்தார். அனந்தவாணியின் தந்தை மாற்றுத்திறனாளி. அவரது தாயாரும் கடுமையான உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுப் படுக்கையில் இருந்துள்ளார். இதனால், தனது வயதான பெற்றோரை அருகில் இருந்து கவனித்துக் கொள்வதற்காக அனந்தவாணி நிறுவனத்திடம் அனுமதி பெற்று, வீட்டில் இருந்தே பணியாற்றி வந்தார்.
பெற்றோரைப் பராமரிப்பதே தனது முதல் கடமை எனக் கருதிய அனந்தவாணி, அதற்காகத் தனக்கு வரவிருந்த திருமண வரன்களையும் தள்ளிப்போட்டுத் தியாக வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில்தான், அனந்தவாணியின் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்ற சியாம் பாபு என்ற ஆட்டோ ஓட்டுநருடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
சியாம் பாபுவை அனந்தவாணி உருகி உருகிக் காதலித்து வந்த நிலையில், அண்மையில் அவனுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கும் அதிர்ச்சி உண்மை அனந்தவாணிக்குத் தெரியவந்தது. இதனால் ஏமாற்றமடைந்த அவர், உடனடியாக சியாம் பாபுவுடனான அனைத்து தொடர்புகளையும் துண்டித்துக் கொண்டு, அவரை விட்டு முற்றிலுமாக விலகினார்.
தன்னை அனந்தவாணி முற்றிலுமாகப் புறக்கணித்ததால் ஆத்திரமடைந்த சியாம் பாபு, அவரைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்தான். இதன்படி, சம்பவத்தன்று நள்ளிரவு நேரத்தில் அனந்தவாணியின் வீட்டிற்குள் அவனுக்குத் தெரியாமல் ரகசியமாகப் புகுந்துள்ளான். அங்குப் பெற்றோரின் அருகே உறங்கிக் கொண்டிருந்த அனந்தவாணியை, தான் மறைத்து வைத்திருந்த கூர்மையான கத்தியால் சியாம் பாபு உடலின் பல்வேறு இடங்களில் சரமாரியாகக் குத்தியுள்ளான். இதில் பலத்த காயமடைந்து இரத்த வெள்ளத்தில் சரிந்த அனந்தவாணி, சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தார். அனந்தவாணியின் அலறல் சத்தம் கேட்டு அவரது உடல்நலம் பாதிக்கப்பட்ட பெற்றோர் எழுவதற்குள் சியாம் பாபு அங்கிருந்து தப்பியோடி விட்டான்.
இந்த சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், அனந்தவாணியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இக்கொலை குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள கொலையாளி சியாம் பாபுவைப் பிடிக்கத் தனிப்படை அமைத்துத் தீவிரமாக வலைவீசித் தேடி வருகின்றனர். பெற்றோரைத் தவிக்கவிட்டுப் பெண் என்ஜினீயர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.