இளம்பெண்ணை 2 நாட்களாக அடைத்து வைத்து கூட்டுப் பலாத்காரம் - வேலைவாய்ப்பு ஆசை காட்டி கொடூரம்!
கேரள மாநிலம் எர்ணாகுளம் கொச்சியில் ஸ்பா ஒன்றின் மேலாளர் பதவிக்கு வேலை தருவதாகக் கூறி வரவழைக்கப்பட்ட இளம்பெண் ஒருவர், இரண்டு நாட்களாக அறையில் அடைத்து வைத்து மயக்க மருந்து கொடுத்துக் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்ட கோரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எர்ணாகுளத்தில் வசித்து வந்த இளம்பெண் ஒருவர், ஆன்லைனில் ஸ்பா மேலாளர் பணிக்கு வந்த விளம்பரத்தைப் பார்த்து கடந்த 2-ம் தேதி நேர்காணலில் கலந்து கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அன்றைய தினம் மாலை, அக்குழுவைச் சேர்ந்த ஒரு பெண், பணி சாராத சந்திப்பு என்று கூறி அந்தப் பெண்ணை இடப்பள்ளியில் உள்ள தங்கும் விடுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
விடுதிக்குச் சென்ற அந்தப் பெண்ணைக் கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்தபோது அதில் மயக்க மருந்து கலக்கப்பட்டு இருந்துள்ளது. இதனால் சுயநினைவை இழந்த அவரை அக்டோபர் 2 மற்றும் 3 ஆகிய இரண்டு நாட்களாகச் சட்டவிரோதமாக அடைத்து வைத்துத் தொடர்ச்சியாகக் கூட்டுப் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் இந்தச் கொடூரச் செயலைச் செல்போனிலும் வீடியோவாகப் பதிவு செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் அதிர்ச்சியிலிருந்து மீண்டு வந்து கொண்டிருந்த நிலையில், இது குறித்து அவரது தோழி அளித்த புகாரின் அடிப்படையில் கொச்சி மாநகரக் காவல் ஆணையாளர் காளிராஜ் மகேஷ் குமார் தலைமையிலான காவல்துறையினர் உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஸ்ரீராஜ் (30), ஜித்து (27) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் ஸ்ரீராஜ் கொச்சியில் நான்கு ஸ்பா மையங்களை நடத்தி வருவது தெரிய வந்துள்ளது. தலைமறைவாக உள்ள மேலும் ஒரு பெண்ணையும் மற்றொரு நபரையும் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.