கணவரின் நண்பரால் இளம்பெண் தொடர் பாலியல் வன்கொடுமை... மும்பையில் அதிர்ச்சி!
மும்பையில் கணவரின் நண்பர்கள் மற்றும் சில நபர்களால் 20 வயது இளம்பெண் ஒருவர் தொடர்ச்சியாகப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாகக் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பை கோரேகான் மேற்கு, பகத் சிங் நகர் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்த 20 வயதுப் பெண் இந்தப் புகாரை அளித்துள்ளார். பாங்கூர் நகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் ஓட்டுநராகப் பணிபுரிந்து வரும் நிலையில், அவரது நீண்ட வேலை நேரம் காரணமாகப் பெண் பகல் வேளைகளில் தனியாக இருந்துள்ளார். இதனைப் பயன்படுத்தி மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
ஜூலை மாதத்தின் முதல் வாரத்தில் ஒரு நபர் அத்துமீறி நுழைந்து வன்கொடுமை செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து, வீட்டு உரிமையாளரின் பொருட்களை எடுப்பதாக நடித்து வந்த சுல்தான் மற்றும் அங்குஷ் ஆகியோரும், அடுத்தடுத்த நாட்களில் தலிப் மற்றும் ராஜா ஆகியோரும் புகார்தாரரின் வீட்டிற்குள் நுழைந்து அவரைத் தாக்கித் தொடர்ச்சியாகத் துன்புறுத்தியுள்ளனர். குற்றவாளிகளின் மிரட்டல் காரணமாக அப்பெண் ஆரம்பத்தில் யாரிடமும் தெரிவிக்காமல் இருந்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 17 அன்று உடல்நலக் குறைவைக் காரணம் காட்டி அந்த வீட்டை விட்டு வெளியேறி பெற்றோர் வீட்டிற்குச் சென்ற அவர், நடந்த கொடூரங்களை அவர்களிடம் விவரித்துள்ளார். அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 19 அன்று காவல் நிலையத்தில் முறைப்படி புகார் அளிக்கப்பட்டது.
இது குறித்த புகாரின் அடிப்படையில் பாரதிய நியாய சம்ஹிதா பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத நபர் மற்றும் சுல்தான், அங்குஷ், தலிப், ராஜா உள்ளிட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.