அரசு மருத்துவமனைக்குள் புகுந்து இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து... பாதுகாப்பையும் மீறி உள்நுழைந்த வாலிபர்!
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த தனது தாய்க்கு உதவியாகத் தங்கியிருந்த பெண், கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பான இடமாகக் கருதப்படும் அரசு மருத்துவமனைக்குள்ளேயே இத்தகைய துணிகரச் சம்பவம் நடந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை உண்டாக்கியுள்ளது. கணவரை இழந்த சுதா (36) என்ற பெண், தனது இரண்டாவது கணவரான சுபாஷ் என்பவரிடமிருந்து பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் கடம்பங்குடியைச் சேர்ந்த சுதா, தனது தாயாரின் சிகிச்சைக்காக கடந்த பிப்ரவரி 26ம் தேதி முதல் சிவகங்கை அரசு மருத்துவமனையில் தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் கடந்த மார்ச் 1ம் தேதி மருத்துவமனைக்கு வந்த சுபாஷ், சுதாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே தகராறாக மாறியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சுபாஷ், வெளியே சென்று கத்தி ஒன்றை வாங்கி வந்துள்ளார். பாதுகாப்புப் பணியாளர்கள் உள்ளே அனுமதிக்கத் தடுத்தபோது, "போர்வை கொடுக்கப் போகிறேன்" என்று பொய் கூறிவிட்டு போர்வைக்குள் கத்தியை மறைத்து எடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்துள்ளார். தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சுதாவைத் தாக்கிவிட்டு சுபாஷ் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சுதாவிற்கு அதே மருத்துவமனையில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து சிவகங்கை நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். தப்பியோடிய சுபாஷை போலீசார் கைது செய்து தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் ஆயுதத்துடன் ஒருவர் எளிதாக நுழைந்து தாக்குதல் நடத்தியது, மருத்துவமனையின் பாதுகாப்பு குறைபாடுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. மருத்துவமனை நுழைவாயில்களில் கடுமையான சோதனை நடத்தப்பட வேண்டும் என்றும், கூடுதல் காவலர்களை நியமிப்பதோடு, 24 மணி நேர சிசிடிவி கண்காணிப்பை உறுதி செய்ய வேண்டும் என நோயாளிகளின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில் மருத்துவமனை வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது