கஞ்சா போதை கும்பலால் இளைஞர் உயிரிழப்பு... வெறித்தனமாக அடித்துக் கொலை!

 

திருவண்ணாமலையில் முன்விரோதம் காரணமாக 26 வயது இளைஞர் ஒருவரைக் கஞ்சா போதை கும்பல் கருங்கல்லால் கொடூரமாகத் தாக்கிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை நகர்ப் பகுதியில் வசித்து வந்த ரஞ்சித் (26) என்ற இளைஞருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே நீண்ட நாட்களாக முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.  நேற்று இரவு ரஞ்சித் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது, அங்கு வந்த கஞ்சா போதை கும்பல் அவரிடம் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளது. வாக்குவாதம் முற்றவே, ஆத்திரமடைந்த அந்தக் கும்பல் ரஞ்சித்தை வளைத்து வளைத்துத் தாக்கியதுடன், அங்கிருந்த பெரிய கருங்கல்லை எடுத்து அவரது தலையில் கொடூரமாகப் போட்டுள்ளது.

இத்தாக்குதலில் படுகாயமடைந்து இரத்த வெள்ளத்தில் ரஞ்சித் மயங்கி விழுந்ததைத் தொடர்ந்து, அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. அக்கம் பக்கத்தினர் ரஞ்சித்தை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும், அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி ரஞ்சித் பரிதாபமாக உயிரிழந்தார்.

இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கொலைக் குற்றம் தொடர்பாகப் போலீசார் கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்துத் தேடி வந்தனர். இதில், கொலையில் தொடர்புடைய மோகன் மற்றும் சந்துரு ஆகிய இருவரைப் போலீசார் சில மணி நேரங்களிலேயே கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டுத் தப்பியோடிய எஞ்சிய இரண்டு நபர்களைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கஞ்சா போதை கும்பலால் இளைஞர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் கஞ்சா விற்பனையாளர்களை ஒடுக்கப் போலீசார் தீவிரச் சோதனைகளில் இறங்கியுள்ளனர்.