உஷார்... நாய் கடியை அலட்சியப்படுத்திய வாலிபர் 6 மாதங்கள் கழித்து மரணம்!
ஈரோடு மாவட்டம் பவானி அருகே, நாய் கடித்ததற்கு முறையான மருத்துவச் சிகிச்சை மற்றும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் அலட்சியமாக இருந்த வடமாநில வாலிபர் ஒருவர், ஆறு மாதங்களுக்குப் பிறகு 'ரேபிஸ்' நோயால் பாதிக்கப்பட்டுப் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் அப்ரஜித் குமார் (22). இவர் ஈரோடு மாவட்டம் பவானி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள ஒரு தனியார் டையிங் நிறுவனத்தில் தொழிலாளியாகப் பணிபுரிந்து வந்தார். இதற்காக அவர் அங்கேயே தங்கியிருந்தார். இந்நிலையில், வழக்கம் போல் பணியில் ஈடுபட்டிருந்த அப்ரஜித் குமாருக்குத் திடீரென கடுமையான மூச்சுத்திணறல் மற்றும் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் நோயின் தாக்கம் தீவிரமடைந்த நிலையில், அவர் திடீரென நாய் குரைப்பதைப் போன்ற சத்தங்களை எழுப்பி வினோதமாக நடந்துகொண்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சக தொழிலாளர்கள், அவரை மீட்டு உடனடியாகப் பவானி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அப்ரஜித் குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காவல்துறையினர் மற்றும் மருத்துவக் குழுவினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.
சுமார் 6 மாதங்களுக்கு முன்பு அப்ரஜித் குமார் பீகாரில் இருந்தபோது, அவரைத் தெருநாய் ஒன்று கடித்துள்ளது. அப்போது அவர் அதனைப் பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளாமல், காயத்திற்கு முறையான மருத்துவச் சிகிச்சையோ அல்லது ரேபிஸ் எதிர்ப்புத் தடுப்பூசிகளோ செலுத்திக் கொள்ளவில்லை. நாய் கடித்த உடனே தடுப்பூசி போடாததால், அந்த வைரஸ் அவரது உடலில் மெதுவாகப் பரவி, தற்போது 6 மாதங்களுக்குப் பிறகு மூளையைத் தாக்கி ரேபிஸ் நோயின் தீவிர நிலையை எட்டியுள்ளது.
நாய், பூனை போன்ற விலங்குகள் கடித்தால் சிறிய காயமாக இருந்தாலும் சரி, நகக்கீறலாக இருந்தாலும் சரி, அதனைப் பொதுமக்கள் யாரும் எப்போதும் அலட்சியப்படுத்தக் கூடாது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். விலங்குகள் கடித்த உடனே கடித்த இடத்தை சோப்பு மற்றும் ஓடும் தண்ணீரில் நன்றாகக் கழுவ வேண்டும். பின்னர், உடனடியாக அருகில் உள்ள அரசு அல்லது தனியார் மருத்துவமனைக்குச் சென்று 24 மணி நேரத்திற்குள் உரிய ரேபிஸ் தடுப்பூசிகளை மருத்துவர்களின் அறிவுரைப்படி முழுமையாகப் போட்டுக் கொள்ள வேண்டும் என்று பொதுமக்களுக்கு மருத்துவத் துறையினர் அவசர விழிப்புணர்வு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.