காதல் விவகாரத்தில் இளைஞர் வெட்டிக் கொலை; 3 பேர் கைது!

 

சென்னையை அடுத்த கேளம்பாக்கம் பகுதியில் காதல் விவகாரம் காரணமாக வாலிபர் ஒருவர் அரிவாளால் வெட்டிக் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கேளம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பிரவீன்குமார் (23) என்ற இளைஞர் பெண் ஒருவரைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு அப்பெண்ணின் குடும்பத்தினரும் உறவினர்களும் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, பெண்ணின் உறவினர்கள் பிரவீன்குமாரை வழிமறித்து அரிவாளால் கொடூரமாக வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவர் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரவீன்குமார் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாகக் கேளம்பாக்கம் காவல்துறையினர் தொடக்கத்தில் கொலை முயற்சி வழக்காகப் பதிவு செய்திருந்த நிலையில், இளைஞர் உயிரிழந்ததைத் தொடர்ந்து அதை கொலை வழக்காக மாற்றினர்.

இக்கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட பெண்ணின் உறவினர்களான ஏழுமலை (48), மணிகண்டன் (31) மற்றும் நந்தீஸ் (19) ஆகிய 3 பேரைக் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.