தங்கும் விடுதியில் பெண் டாக்டர் கொலை! தங்கச்சங்கிலியை தருவதாக அழைத்த இன்ஸ்டாகிராம் நண்பர் தலைமறைவு

 

 

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் தங்கும் விடுதியில் பெண் டாக்டர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் அவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான ரவிக்குமார் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஸ்ருஜனா. 27 வயதான இவர் ஹனுமகொண்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரியில் குழந்தைகள் மருத்துவப் பிரிவில் முதுநிலை மருத்துவம் முதலாம் ஆண்டு படித்து வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஸ்ருஜனாவுக்கு சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் ரவிக்குமார் என்பவர் அறிமுகமானதாக கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரவிக்குமார் அவசரமாக பணம் தேவைப்படுவதாக கூறி ஸ்ருஜனாவிடம் இருந்து தங்கச்சங்கிலி ஒன்றை பெற்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, தனது தங்கச்சங்கிலியை திருப்பித் தருமாறு ஸ்ருஜனா கேட்டுள்ளார். கடந்த செப்டம்பர் 29-ம் தேதி அவரை தொடர்புகொண்ட ரவிக்குமார், தங்கச்சங்கிலியை திருப்பித் தருவதாக கூறி ஐதராபாத் வருமாறு அழைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.இதையடுத்து ஸ்ருஜனா ஐதராபாத்தில் உள்ள மியாபூர் பகுதியில் ரவிக்குமார் தங்கியிருந்த விடுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. அங்கு இருவருக்கும் இடையே தங்கச்சங்கிலியை திருப்பித் தருவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதன்பின்னர் ஸ்ருஜனா தனது வீட்டிற்கு திரும்பவில்லை. அவரை தொடர்புகொள்ள முடியாததால், அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் ஸ்ருஜனாவின் செல்போன் உள்ளிட்ட தகவல்களை ஆய்வு செய்து அவர் மியாபூர் விடுதிக்கு சென்றதை கண்டறிந்தனர்.போலீசார் விடுதிக்கு சென்று பார்த்தபோது, ஸ்ருஜனா அறையில் சடலமாக கிடந்தது தெரியவந்தது. அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.இதையடுத்து, ஸ்ருஜனாவுடன் கடைசியாக தொடர்பில் இருந்ததாக கூறப்படும் ரவிக்குமாரை போலீசார் தேடி வருகின்றனர். அவரது செல்போன் தற்போது அணைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இன்ஸ்டாகிராம் மூலம் பல ஆண்டுகளாக பழக்கமான நபரை சந்திக்க சென்ற பெண் டாக்டர் உயிரிழந்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தின் முழுமையான பின்னணி மற்றும் உயிரிழப்புக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.