பேருந்தில் இருந்து விழுந்த பெண் நடத்துநர் உயிரிழப்பு; குடும்பத்துக்கு அரசு உதவி அறிவிப்பு!
தெலங்கானாவில் அரசுப் பேருந்தில் பயணச்சீட்டு மீதிப்பணம் தொடர்பாக ஏற்பட்ட தகராறு, பெண் நடத்துநரின் உயிரைப் பறித்துள்ளது.
பத்ராத்ரி கோத்தகுடெம் மாவட்டத்தில் கடந்த அக்டோபர் 25-ம் தேதி அரசுப் பேருந்தில் மௌனிகா என்ற பயணி பயணம் செய்துள்ளார். அப்போது பயணச்சீட்டுக்கான மீதிப்பணம் தொடர்பாக அவருக்கும் பெண் நடத்துநர் பிரவலிகாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் மௌனிகா தள்ளியதில் பிரவலிகா பேருந்தில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தார்.
இதையடுத்து அவர் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பிரவலிகா உயிரிழந்தார். அவர் பணியில் சேர்ந்து வெறும் 10 மாதங்களே ஆகியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரவலிகாவின் உயிரிழப்பைத் தொடர்ந்து அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, உயிரிழந்த நடத்துநரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதுடன், உரிய இழப்பீடும் வழங்கப்படும் என தெலங்கானா அரசு உறுதியளித்துள்ளது.