ரீல்ஸ் ஆசையால்  கொடூரம்... அணை கால்வாயில் வழுக்கி விழுந்து 3 பேர் பரிதாப பலி – ஒருவர் மாயம்!

 

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் அணைக்கட்டு பாசனக் கால்வாய் அருகே ரீல்ஸ் வீடியோ எடுத்தபோது எதிர்பாராத கொடூர விபத்து அரங்கேறியுள்ளது. ஸ்ரீராம் சாகர் அணைக்கட்டின் லட்சுமி பாசனக் கால்வாய் பகுதிக்குச் சென்ற 4 நபர்கள் தங்களது செல்போனில் ஆபத்தான முறையில் ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாகக் கால் வழுக்கி விழுந்ததில், ஒருவர் மீது ஒருவர் விழுந்து 4 பேரும் வேகமாகப் பாய்ந்த கால்வாய் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். கட்டுக்கடங்காமல் பாய்ந்த நீர்ரோட்டத்தில் சிக்கிய நால்வராலும் நீந்தி கரை ஏற முடியாமல் தண்ணீரில் மூழ்கத் தொடங்கினர்.

கால்வாயில் நபர்கள் அடித்துச் செல்லப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், உடனடியாகக் காவல் துறை மற்றும் மீட்புப் படையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப் படையினர் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு 3 பேரின் சடலங்களை நீரில் இருந்து மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட 3 பேரின் உடல்களையும் கைப்பற்றிய காவல் துறையினர் பிரேதப் பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதே வேளையில் நீரில் அடித்துச் செல்லப்பட்டு மாயமான மேலும் ஒருவரைத் தேடும் பணிகளில் மீட்புக் குழுவினர் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் லைக் மற்றும் புகழுக்காக இளைஞர்கள் ஆபத்தான இடங்களில் ரீல்ஸ் வீடியோக்கள் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும் எனக் காவல் துறையினர் எச்சரித்துள்ளனர். இத்தகைய விபரீத வீடியோ முயற்சிகள் தங்களது உயிரையே பறிக்கும் ஆபத்தாக முடிவதாகச் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். கால்வாய் நீரில் சிக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்துக் காவல் துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.