காங்கிரஸ் பிரமுகர் மீது நடிகரின் மனைவி பரபரப்பு புகார்... ரூ.10 லட்சம் நகை மோசடி செய்ததாக காவல்நிலையத்தில் புகார்!
அவசரப் பணத் தேவைக்காகத் தங்க நகைகளை விற்பனை செய்யக் கொடுத்துவிட்டு, அதற்கான பணத்தில் ரூ.10 லட்சத்தை வழங்காமல் ஏமாற்றியதாகக் காங்கிரஸ் பிரமுகர் ரஞ்சன் குமார் மீது பிரபல தொலைக்காட்சி நடிகர் முகமது குரேஷியின் மனைவி சென்னை அண்ணா சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர் சின்னத்திரை நடிகர் முகமது குரேஷி. தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான இவரது மனைவி, சென்னை அண்ணா சாலை காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அந்தப் புகார் மனுவில், அவசரப் பணத் தேவை காரணமாகத் தன்னிடம் இருந்த 92.73 கிராம் எடையுள்ள தங்க நகைகளைக் காங்கிரஸ் பிரமுகர் ரஞ்சன் குமாரிடம் விற்பனை செய்வதற்காக வழங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார். நகைகளுக்கு மொத்தமாக ரூ.14 லட்சம் தருவதாக ரஞ்சன் குமார் உறுதியளித்ததாகவும், அதன்படி முதற்கட்டமாக ரூ.4 லட்சம் மட்டுமே வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
மீதமுள்ள ரூ.10 லட்சத்தைப் பலமுறை கேட்டும் ரஞ்சன் குமார் வழங்காமல் காலம் தாழ்த்தி ஏமாற்றி வருவதாகவும், எனவே தனக்குச் சேர வேண்டிய பணத்தை மீட்டுத் தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் போலீசாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தப் புகாரைப் பெற்றுக்கொண்ட அண்ணா சாலை காவல் நிலைய போலீசார், புகார்தாரருக்குச் சி.எஸ்.ஆர். ரசீது வழங்கி முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இதற்கிடையே, தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்துள்ள காங்கிரஸ் பிரமுகர் ரஞ்சன் குமார், புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் தவறானவை என்றும், இந்தப் புகாரைச் சட்டப்படி எதிர்கொள்ளப் போவதாகவும் தெரிவித்துள்ளார். இருதரப்பினரின் விளக்கங்கள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.