உஷார் மக்களே... மே 4 முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்... 110 டிகிரி வரை வெயில் கொளுத்தும்!  

 

தமிழகத்தில் மார்ச் மாதம் முதலே கோடை வெயில் தனது கோர முகத்தைக் காட்டி வருகிறது. குறிப்பாக வேலூரில் வெப்பம் 108 டிகிரியைத் தாண்டிப் பதிவாகியுள்ள நிலையில், கோடையின் உச்சமான அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் காலம் வரும் மே 4-ஆம் தேதி தொடங்கி 28-ஆம் தேதி வரை நீடிக்க உள்ளது. இந்த நாட்களில் வெப்பம் 110 டிகிரி வரை உயரக்கூடும் என்பதால், பகலில் கொளுத்தும் வெயிலோடு இரவிலும் கடும் புழுக்கம் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்துத் தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் அளித்துள்ள விளக்கத்தில், இந்த ஆண்டு கத்தரி வெயில் காலம் வெப்பமும் கோடை மழையும் கலந்த கலவையாகவே இருக்கும் என்று தெரிவித்துள்ளார். இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் ஏற்படும் கடல் சார்ந்த அலைவுகள் மற்றும் வெப்பமண்டல காற்று குவிதல் காரணமாக, தமிழகத்தில் கோடை மழை இயல்பை விட அதிகமாகப் பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் அக்னி நட்சத்திரத்தின் தாக்கத்திலிருந்து மக்களுக்குச் சற்று நிம்மதி கிடைக்க வாய்ப்புள்ளது.

மேலும், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என வானிலை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வரும் மே 23 முதல் 25-ஆம் தேதிக்குள் கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதால், அதற்கு முன்னதாகவே காற்றழுத்த தாழ்வுப் பகுதி மற்றும் புயல் போன்ற அமைப்புகள் உருவாகி நல்ல மழையைத் தரக்கூடும். கத்தரி வெயில் காலத்திலேயே பருவமழைக்கான அறிகுறிகள் தென்படுவதால், வெப்பத்தின் கொடுமை ஓரளவிற்குக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.