எகிறிய இளநீர் விலை... கோடை வெயிலால் தாகம் தணிக்கும் பானங்களுக்கு தட்டுப்பாடு!

 


தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி எடுத்து வரும் நிலையில், தாகம் தணிக்க மக்கள் பலரும் தற்போது இயற்கையான இளநீரை நாடிச் செல்கின்றனர். கடந்த மாதம் வரை 40 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு இளநீர், தற்போது 60 முதல் 70 ரூபாய் வரை விற்கப்பட்டு வருவது பொதுமக்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாகத் தரமான பொள்ளாச்சி இளநீரின் விலை 80 ரூபாயைத் தொட்டுள்ளது. மற்ற ரக இளநீர்களும் தரத்திற்கு ஏற்ப 50 முதல் 60 ரூபாய் வரை தாராளமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

கோடை காலத்தின் அதிகப்படியான தேவையைப் பயன்படுத்திக் கொண்டு, இளநீர் உற்பத்தியாளர்கள் விலையைக் கிடுகிடுவென உயர்த்தி வருவதாகச் சிறு வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர். தாங்கள் அதிக விலை கொடுத்து இளநீரை கொள்முதல் செய்வதால், தவிர்க்க முடியாமல் கூடுதல் விலைக்கு விற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த சில வாரங்களாகவே வரத்து குறைந்துள்ளதால், வரும் நாட்களில் விலை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

பண வீக்கம் மற்றும் வெயில் தாக்கம் காரணமாகச் சாமானிய மக்கள் தங்களுக்குப் பிடித்தமான பானங்களைக் கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட இளநீர் இப்போது 70 ரூபாய்க்கு விற்கப்படுவது குடும்பத் தலைவிகளின் பட்ஜெட்டை பதம் பார்த்து வருகிறது. குளிர்பானங்களைக் காட்டிலும் இயற்கையான இளநீருக்கே மக்கள் முன்னுரிமை அளிக்கின்றனர். இருப்பினும், இந்தத் தொடர் விலை உயர்வு காரணமாக ஏழை மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை நீடிக்கிறது