ரூ.103.81 கோடியில் டெண்டர் வெளியீடு... அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 6 மாத வாரண்டியுடன் புத்தகப் பைகள்!

 

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவியருக்கு இலவசமாக வழங்கப்படும் புத்தகப் பை திட்டத்தின் கீழ், 2027–28-ஆம் கல்வி ஆண்டிற்கான ரூ.103.81 கோடி மதிப்பிலான மெகா டெண்டரை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியிட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவியர் அனைவருக்கும் வழங்குவதற்காக மொத்தம் 55,93,170 பள்ளிப் பைகள் கொள்முதல் செய்யப்பட உள்ளன.

டெண்டர் ஆவணத்தில் வெளியிடப்பட்டுள்ள மாதிரியின்படி, பையின் துணி, தையல், ஜிப் மற்றும் தோள்பட்டை ஆகியவை அரசு நிர்ணயித்த உயர்தரத்தில் இருக்க வேண்டும்; தரத்தில் குறைபாடு இருந்தால் அவை நிராகரிக்கப்படும் எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு புத்தகப் பைக்கும் 6 மாத வாரண்டி கட்டாயமாக்கப்பட்டுள்ளது; 6 மாதங்களுக்குள் பை கிழிந்தாலோ, ஜிப் பழுதானாலோ அல்லது ஸ்ட்ராப் அறுந்தாலோ சம்பந்தப்பட்ட நிறுவனமே அதனை இலவசமாக மாற்றிக் கொடுக்க வேண்டும் என அரசு நிபந்தனை விதித்துள்ளது.

2027–28-ஆம் கல்வி ஆண்டு தொடங்குவதற்கு முன்பே பைகளைத் தயார் செய்து, பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே ஒவ்வொரு மாணவரின் கையிலும் புதிய புத்தகப் பை சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் 7 மாதங்களுக்கு முன்பே இந்த டெண்டர் விடப்பட்டுள்ளது.

மாணவர்களின் பயன்பாட்டிற்கு ஏற்ப நவீன வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் புத்தகப் பையில் கீழ்க்கண்ட சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. நேவி ப்ளூ நிறத்துடன் ப்ளூ பீடிங் கொண்ட நவீன வடிவமைப்பு. மாணவர்களின் வகுப்புக்கு ஏற்றவாறு சிறியது, நடுத்தரம் மற்றும் பெரியது என மூன்று அளவுகளில் தயாரிப்பு.

எளிதில் பழுதாகாத தரமான ஜிப் மற்றும் கையில் தூக்கிச் செல்ல எளிதாகத் தனி டாப் ஹேண்டில். டிபன் பாக்ஸ் மற்றும் பென்சில் பாக்ஸ் ஆகியவற்றை வைத்துக் கொள்வதற்கெனத் தனி முன்புறப் பாக்கெட் வசதி.

பையின் வெளிப்புறம் அழகான பீடிங் வடிவமைப்புடன், உட்புறத்தில் பள்ளிக்கல்வித் துறை இலச்சினை மற்றும் தமிழக அரசு இலச்சினை அச்சிடப்பட்டிருக்கும்.