சர்ச்சையால் ரூ.33 லட்சம் டெண்டர் ரத்து; வீட்டு வசதி வாரிய விவகாரத்தில் அதிரடி!

 

சென்னை அசோக் நகரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள 22 தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில், வீடுகளுக்குப் பெயர் பலகை மற்றும் எண்கள் பொருத்தும் பணிக்காக அறிவிக்கப்பட்ட ரூ.33 லட்சம் மதிப்பிலான டெண்டர் சர்ச்சையைத் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த டெண்டருக்கு விண்ணப்பிக்க மிகக் குறைந்த கால அவகாசமே வழங்கப்பட்டதாகவும், இணையதளத்தில் ஒப்பந்ததாரர்கள் பலர் முயன்றும் விண்ணப்பிக்க முடியாத நிலை உருவாக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது. பாதிக்கப்பட்ட ஒப்பந்ததாரர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியைத் தொடர்புகொண்டு கேட்டபோது, "குறிப்பிட்ட கான்ட்ராக்டர்கள் மட்டுமே இதில் விண்ணப்பிக்க முடியும்" என அவர் பதிலளித்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் பரவிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அரசு நிர்வாகத்தில் டெண்டர்கள் வெளிப்படையாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், குறைந்த மதிப்பு கொண்ட இந்த டெண்டரிலேயே இத்தகைய முறைகேடு புகார்கள் எழுந்தது ஒப்பந்ததாரர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சர்ச்சையும் எதிர்ப்புகளும் வலுத்ததைத் தொடர்ந்து, அசோக் நகர் குடியிருப்புக்கான ரூ.33 லட்சம் மதிப்பிலான அந்த டெண்டரைத் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, மனைப் பிரிவுகளை வகைமாற்றம் செய்வதற்கான கோப்புகளை அரசுத் துறைகள் கிடப்பில் போட்டுள்ளதாகக் கோவை கட்டுமானச் சங்கம் புகார் தெரிவித்துள்ளது. அரசின் அறிவிப்புகளுக்கு மாறாகச் செயல்பாடுகள் இருப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ள அச்சங்கம், தாமதப்படுத்தப்படும் கோப்புகளுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது.