தென்காசி தவெக மாவட்டச் செயலாளர் ராஜினாமா - திமுகவில் இணைய இருப்பதாக தகவல்!
தமிழக வெற்றிக் கழகத்தின் தென்காசி மாவட்டச் செயலாளர் ராஜபிரகாஷ், கட்சியிலிருந்து விலகுவதாகக் கட்சித் தலைமைக்குக் கடிதம் அளித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில், கட்சித் தலைமை அவரைப் பனையூருக்கு அழைத்து எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து இந்த முடிவை அவர் எடுத்திருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தென்காசி மாவட்டச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்த ராஜபிரகாஷ் மீது தொடர்ந்து பல்வேறு புகார்கள் கட்சித் தலைமைக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில், அவரைப் பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்திற்கு அழைத்துத் தலைமை நிர்வாகிகள் எச்சரிக்கை விடுத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தலைமையின் எச்சரிக்கையைத் தொடர்ந்து அதிருப்தியடைந்த ராஜபிரகாஷ், த.வெ.க. பொறுப்பு மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாகத் தலைமைக்குக் கடிதம் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. கட்சியிலிருந்து விலக முடிவெடுத்துள்ள ராஜபிரகாஷ், வாசுதேவநல்லூர் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ராஜாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, ராஜபிரகாஷ் விரைவில் திமுகவில் இணையக்கூடும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் இதுவரை வெளியாகவில்லை.