தூத்துக்குடியில் தொடரும் பதற்றம்... மாணவி படுகொலை வழக்கில் குற்றவாளிகளைக் கைது செய்யக்கோரி போராட்டம்!
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட விவகாரம் தமிழகத்தையே உலுக்கி வரும் நிலையில், குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகள் இணைந்து, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தன. இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக, தமாகா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டு தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
"மாணவியின் மரணத்திற்குப் பின்னால் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைப் பாரபட்சமின்றி உடனடியாகக் கைது செய்ய வேண்டும்; வழக்கை விரைந்து முடிக்க வேண்டும்" என வலியுறுத்தப்பட்டது. வேடநத்தம் மாணவி கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளன:
திருச்செந்தூர்: யாதவ அமைப்புகள் சார்பில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. மேலும், நாளை (மார்ச் 16) திருச்செந்தூர் பகுதியில் கடையடைப்பு நடத்தவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் பொதுமக்கள் திரண்டு மறியலில் ஈடுபட்டதால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த வழக்கில் முறையான விசாரணை நடத்தப்படவில்லை என்று கூறி, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூற வந்த கனிமொழி எம்.பி-யை கிராம மக்கள் முற்றுகையிட்ட சம்பவம் ஏற்கனவே பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது பாஜக உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் நேரடியாகப் போராட்டத்தில் குதித்துள்ளது, திமுக அரசுக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறை தரப்பில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ள போதிலும், குற்றவாளிகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் முழுமையாக வெளியாகவில்லை. குற்றவாளிகளுக்குத் தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் ஒட்டுமொத்தக் குரலாக உள்ளது.