கடலூரில் பதற்றம்.. ரோட்டோரம் 2 இளைஞர்கள் சடலமாக மீட்பு - உறவினர்கள் சாலை மறியல்!

 

கடலூர் நெல்லிக்குப்பம் அருகே காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த இரண்டு இளைஞர்கள் சாலையோரத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் நெல்லிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திடீரெனக் காணாமல் போயுள்ளனர். இது குறித்து அவர்களின் குடும்பத்தினர் காவல்துறையில் புகாரும் அளித்துள்ளனர்.

இளைஞர்கள் மாயமானது குறித்து உரிய புகார் அளித்தும் காவல்துறையினர் உடனடியாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி, பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களும் பொதுமக்களும் நேற்று மாலை திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர் போராட்டங்கள் மற்றும் தேடுதல்களுக்கு இடையே, நேற்று இரவு 7 மணியளவில் அந்த இளைஞர்கள் இருவரும் சாலையோரத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர்.

காணாமல் போனதாகத் தேடப்பட்ட இளைஞர்கள் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருவதால் கூடுதல் காவல்துறையினர் குவிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.