கடலூரில் பதற்றம்... கார் ஓட்டுநர் மீது நாட்டு வெடிகுண்டு வீசி வெட்டிக்கொலை!
கடலூர் அருகே காரைச் சுத்தம் செய்து கொண்டிருந்த கார் ஓட்டுநரை மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொடூரமாகக் கொலை செய்து தப்பியோடியுள்ளனர்.
கடலூர் பெரிய காட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சசிக்குமார் (31) என்பவர் சொந்தமாகக் கார் ஓட்டி பிழைப்பு நடத்தி வந்தார். வீட்டின் அருகே நின்றிருந்த தனது காரைச் சசிக்குமார் சுத்தம் செய்துகொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திடீரென அவர் மீது நாட்டு வெடிகுண்டை வீசியுள்ளனர்.
வெடிகுண்டு வெடித்த அதிர்ச்சியில் தடுமாறிய அவரை, அந்த மர்ம கும்பல் அரிவாளால் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்துவிட்டுச் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியது.
நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதில் சசிக்குமார் இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், சடலத்தைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய மர்ம நபர்களைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுத் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.