டெல்லியில் பரபரப்பு... பாஜக அலுவலகத்தில் மண்டலத் தலைவர் மீது பைப், பெல்ட்டால் கொடூரத் தாக்குதல்!

 

மேற்கு டெல்லி பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், தனது சொந்தக் கட்சியைச் சேர்ந்த தலித் மண்டலத் தலைவரை அலுவலகத்திற்கு வரவழைத்து விடிய விடிய சிறைபிடித்துத் தாக்கியதாக எழுந்துள்ள புகார் டெல்லி அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு டெல்லியின் முண்ட்கா தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ கஜேந்திர தாரல், வாக்காளர் பட்டியல் குறித்து ஆலோசிக்க வேண்டும் எனக் கூறி, கன்ஜாவ்லா பகுதி பாஜக தலித் மண்டலத் தலைவர் சுனில் குமாரை கடந்த வியாழக்கிழமை மாலை கட்சி அலுவலகத்திற்கு அழைத்துளார். அலுவலகத்திற்குச் சென்றதும் அங்குள்ள சிசிடிவி கேமராக்களை அணைத்துவிட்டு கதவுகளைப் பூட்டிய அவர்கள், விடிய விடிய சுனில் குமாரைப் பிணைக்கைதியாகச் சிறைபிடித்து பெல்ட், தடி மற்றும் பிளாஸ்டிக் குழாய்களால் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். மேலும் சாதிய ரீதியாகவும் அவர்கள் வசைபாடியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

வெள்ளிக்கிழமையன்று தனக்கு நேர்ந்த கொடூரத் தாக்குதலால் உடலெங்கும் ஏற்பட்ட நீல நிறக் காயங்களையும் தழும்புகளையும் சுனில் குமார் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். டெல்லி காவல்துறையிடம் புகார் அளித்தும் இதுவரை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்திற்கு ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் குல்தீப் குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பா.ஜ.க ஆட்சியில் சொந்தக் கட்சித் தலித் நிர்வாகிக்கே பாதுகாப்பு இல்லை எனக் குறிப்பிட்டுள்ள அவர், எம்.எல்.ஏ கஜேந்திர தாரலை கட்சியிலிருந்து நீக்கிவிட்டு, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.